Published : 28 Apr 2018 11:15 AM
Last Updated : 28 Apr 2018 11:15 AM

எங்கு தோண்டினும் குழந்தைகளின் எலும்புகள், கூடுகள்: உலக வரலாறு திடுக்கிடும் சடங்கு, பலி சம்பவம்; பெரூவில் தொல்லியல் ஆய்வில் அதிர்ச்சி

லத்தீன் அமெரிக்கா என்று வழங்கப்படும் தென் அமெரிக்க நாடான பெரூவில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே சமயத்தில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 200 பொதி ஒட்டகங்களை பெரிய அளவில் பலி கொடுத்து சடங்கு நிறைவேற்றப்பட்ட பயங்கர இடத்தை வடக்குக் கடற்கரைப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

550 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்திருக்கலாம் என்றும் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள், 200க்கும் மேற்பட்ட பொதி ஒட்டகங்கள் பெரிய அளவிலான ரத்த ஆறு சடங்கில் பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் பெரூவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக நேஷனல் ஜியாகிரபிக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மனிதகுலம் கடந்து வந்தபாதை பயங்கரமானது கொடூரமானது. இலக்கிய மேதை பிரான்ஸ் காஃப்கா ஏதோ ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல், Man is an Evil Thought in God's mind (கடவுளின் மனதில் உதித்த தீய சிந்தனையே மனிதன்). ஆனால் நாம் ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது..’ என்று மானுடகுலத்தை லட்சியவாதம் செய்து வைத்துள்ளோம்.

தென் அமெரிக்காவின் பழம்பெரும் ‘நாகரீகங்களாக’ கருதப்படும் ஆஸ்டெக், மயா, இன்கா போன்ற பழங்குடி நாகரீகங்களில் நரபலி காலனிய காலக்கட்டங்களில் நடைபெற்றதாக ஸ்பானிய காலனிய கால ஆவணங்கள், பயணக்குறிப்புகள் காட்டியுள்ளன.

ஆனால் ஒரே சந்தர்ப்பத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் குழந்தைகளைப் பலி கொடுத்த கொலம்பஸுக்கு முந்தைய சிமு நாகரீகத்தில் இருந்திருப்பது தென் அமெரிக்க பழங்குடி வரலாற்றில் முன் எப்போதும் பதிவு செய்யப்படாதது என்பது இதன் பயங்கரத்தை அறிவுறுத்துகிறது.

சடங்குகளுக்குப் பலி கொடுக்கப்பட்ட குழந்தைகளின் வயது 5-இலிருந்து 14க்குள் இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த எலும்புகளிலிருந்து தெரியவந்துள்ளது. பலி கொடுக்கப்பட்ட பொதி ஒட்டகங்கள் பெரும்பாலும் 18 மாதங்களுக்குட்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

சிமு அரசாட்சி பசிபிக் கடற்கரையில் உள்ள 600 மைல்கள் பகுதியில் தற்போதைய லிமாவின் பெரூ-ஈக்வடார் எல்லை வரை சிமு அரசாட்சி கோலோச்சியுள்ளது. இன்காதான் பெரிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர். இன்கா படையினர் சிமு அரசை கி.பி.1475-ல் முறியடித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

முதன் முதலில் 2011-ல் சிமு நாகரீகம் தலைப்புச் செய்தியாயின. அப்போது 42 குழந்தைகளின் எலும்புக்கூடுகள், 76 பொதி ஒட்டகங்களின் எலும்புகள் முதற்கட்ட தொல்லியல் ஆய்வுகளில் வெளிவந்தன.

ஹுவான்சாகோ பகுதியைச் சேர்ந்தவரும் தொல்லியல் ஆர்வலருமான பிரைட்டோ 3500 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயில் பகுதியைத் தோண்டும் போது அப்பகுதியில் வசிப்பவர்கள் இவரை எலும்புக்கூடுகள் ஜாக்கிரதை என்று எச்சரித்துள்ளனர். எலும்புக் கூடுகளின் பெரும்பாலும் மார்புப்பகுதி பிளக்கப்பட்டு இருதயங்களை எடுத்திருப்பதாகக் காட்டியுள்ளது. சிறுவர்களை மேற்குப் புறம் பார்த்தவாரும், ஒட்டகங்களை கிழக்குப் பக்கம் பார்த்தவாறும் புதைத்துள்ளனர்.

நரபலி, குழந்தைகள் பலி பழம்பெரும் பண்பாடுகளில் இருந்தது என்றாலும் ஒரே சமயத்தில் இந்த எண்ணிக்கையில் குழந்தைகளையும் ஒரு குறிப்பிட்ட விலங்கையும் இந்த அளவுக்குப் பலி கொடுக்கும் சந்தர்ப்பங்கள் வேறு எங்கும் இருந்ததில்லை என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

இப்படிப்பட்ட பெரிய பலிகள் நடக்கும்போது ஏன் இப்படி? எதற்காக என்ற கேள்விகள் எழுவது சகஜம். இதற்கு ஆய்வாளர் பிரைட்டோ கூறுவது என்னவெனில் தோண்டும்போது கிடைத்த சேற்று மண்ணின் தன்மை ஆகியவற்றைப் பார்க்கும் போது பொதுவாக வறட்சியாக இருக்கும் அப்பகுதியில் பெரிய அளவுக்கு மழை வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எல் நினோ தொடர்பான பருவநிலை மாற்றமாக இருக்கலாம் என்றும் இதற்கு சாந்தி செய்ய இத்தகைய கொடூரமான பலிகள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

லாஸ் லாமாஸில் இத்தகைய கொடூரமான பலிச்சடங்குகள் நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் அறிவியல் குழு பலி கொடுக்கப்பட்டவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

பலி கொடுக்கப்பட்டது ஆண்களா பெண்களா என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தாலும் முதற்கட்ட டிஎன்ஏ ஆய்வுகளின் படி இருதரப்பினரும் சகட்டுமேனிக்கு பலிகொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிமு அரசின் பல்வேறு பகுதிகளிலிருது பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பயங்கரங்கள் பனிமலையின் ஒரு முகடு மட்டுமே என்கின்றனர் ஆய்வாளர்கள். மானுட குல வரலாறு எத்தகைய கொடூரங்கள் நிறைந்தன என்பவற்றுக்கான ஆதாரங்களாக இவை அமையும்.

(ஏ.எஃப்.பி, ராய்ட்டர்ஸ், நேஷனல் ஜியாகரபி தகவல்களுடன்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x