Published : 20 Apr 2018 08:31 AM
Last Updated : 20 Apr 2018 08:31 AM

உலக மசாலா: வெறிநாய் மருந்து

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தின் தலைநகர் விக்டோரியாவில் இயற்கை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் அன்கு ஸிம்மெர்மான். சமீபத்தில் இவர் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது ஜோனா என்ற சிறுவனை, வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு குணப்படுத்தியதாகத் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஜோனா இருளைக் கண்டு பயப்படுகிறான். இரவில் 3 மணி நேரங்களுக்கு மேல் தூங்குவதில்லை. ஓநாய் வரும் என்று பயமாக இருக்கிறது என்கிறான். பகலில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்கிறான். மாமிச உணவுகளை மட்டும் முகர்ந்து பார்த்துவிட்டு உண்கிறான். சில நேரங்களில் நாய்போல குரைக்கவும் செய்கிறான். பள்ளியில் சக மாணவர்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்கிறான். ஆசிரியர்களால் இவனைச் சமாளிக்க முடியவில்லை. அவனும் கஷ்டப்படுகிறான். நாங்களும் கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார்கள் அவனது பெற்றோர். எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா என்று பெற்றோரிடம் கேட்டேன். இரண்டு வயதில் கடற்கரையில் ஜோனா பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நாய் பிஸ்கெட்டைக் கேட்டு குரைத்தது. இவன் கொடுக்க மறுத்ததால் எதிர்பாராதவிதமாக அந்த நாய் கையில் கடித்துவிட்டது. உடனடியாக சிறுவனுக்கு தடுப்பூசி போட்டு விட்டதாகவும் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் ஜோனாவின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்திருக்கிறது என்றார்கள். வெறிநாய்க் கடியால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். இவனுக்கு வழக்கமான மருத்துவம் இல்லாமல், வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். நாய் கடித்த இடத்தில் உமிழ்நீரை வைத்த இரண்டே நிமிடங்களில் அவனது முகத்தில் சிரிப்பைக் கண்டேன். என் மருத்துவம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வந்தது.

இந்த மருத்துவத்துக்குப் பெயர் Lyssinum 200CH. மூன்று வாரங்களுக்குப் பிறகு அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். வீட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஆனால் பள்ளியில் மூர்க்கமாகவே இருப்பதாகவும் சொன்னார்கள். மீண்டும் உமிழ்நீர் மருத்துவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜோனா இரவைக் கண்டு பயப்படுவதில்லை, பகல் நேரங்களில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்வதில்லை, எப்போதாவது சில நேரங்களில் மட்டுமே குரைப்பதாகச் சொன்னார்கள். முன்பு முழுக்க முழுக்க நாயின் தன்மையோடு இருந்த ஜோனா, இப்போது பெரும்பாலும் மனிதத் தன்மையோடு மாறியிருப்பதைக் கண்டு நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டேன். மருத்துவம் ஆரம்பித்து 6 மாதங்களாகிவிட்டன.

இப்போது ஜோனா இயல்பான, அமைதியான சிறுவனாக மாறியிருக்கிறான். இயற்கை மருத்துவத்தில் வெறிநாய்க் கடியையும் குணப்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. இன்னும் சில வித்தியாசமான பிரச்சினைகளை நான் குணப்படுத்தியிருக்கிறேன். இந்த விவரங்களை என் வலைத்தளத்தில் படித்துக்கொள்ளலாம்” என்று எழுதியிருக்கிறார் அன்கு ஸிம்மெர்மான்.

வெறிநாயின் மூச்சுக் காற்று மனிதர்களின் காயங்கள் மீது பட்டாலே பாதிப்பு வரும் என்பார்கள் மருத்துவர்கள். இவரது கட்டுரையைப் படித்துவிட்டு மருத்துவ உலகமே கொந்தளித்திருக்கிறது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் நோய்க்கான காரணியையே நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்துவதா என்று மருத்துவ நிபுணர்கள் கேட்கிறார்கள். ஆனால் பெண் மருத்துவர் அன்கு ஸிம்மெர்மான் பணிபுரியும் பிரிட்டிஷ் கொலம்பியா இயற்கை மருத்துவக் கல்லூரி, இவருக்குத் துணையாக நிற்கிறது.

மருத்துவத்தில் விளையாடாதீங்கம்மா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x