Published : 03 Apr 2024 08:46 AM
Last Updated : 03 Apr 2024 08:46 AM

தைவானில் கடும் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரான Hualien நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காட்சி

தைபே: தைவானில் இன்று(புதன்கிழமை) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகி உள்ள தெரிவித்துள்ள ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தைவான் தலைநகர் தைபேவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இது 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தைவான் மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

வலுவான நிலநடுக்கம் காரணமாக தைபே நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தைவானின் கிழக்கு நகரமான Hualien இல் கட்டிடங்கள் அசைந்தது குறித்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தைபேயில் சுரங்கப்பாதை சேவையும், தீவு முழுவதும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் 7.5 ஆகவும் தெரிவித்துள்ளது. பூமிக்கு கீழே சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு ஜப்பானிய தீவுக் குழுவான ஒகினாவாவிற்கு 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு யோனகுனி தீவின் கடற்கரையில் 30 சென்டிமீட்டர் (சுமார் 1 அடி) அலை கண்டறியப்பட்டது. மியாகோ மற்றும் யாயாமா தீவுகளின் கடற்கரைகளையும் அலைகள் தாக்கக்கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

தைவானின் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் "25 ஆண்டுகளில் இல்லாத வலிமையானது" என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தைவான் நிலநடுக்கத்தை அடுத்து, பிலிப்பின்ஸ் நாடு, சுனாமி குறித்து எச்சரித்ததுடன், கடலோரப் பகுதிகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை விமானங்கள் நிறுத்தப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், தைவானில் பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் "இப்போது கடந்துவிட்டது" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x