Published : 08 Feb 2018 07:49 AM
Last Updated : 08 Feb 2018 07:49 AM

உலக மசாலா: அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஆண்!

ஜகஸ்தான் 2018-ம் ஆண்டு அழகிப் போட்டியில் கலந்துகொண்டு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் 22 வயது அரினா அலியேவா. தற்போது இவர் பெண் அல்ல, ஆண் என்ற செய்தி அறிந்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இலி டியாஹிலேவ் மாடலாக இருக்கிறார். இவரது நண்பர்கள் அழகிப் போட்டி குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இவர், ‘முன்பெல்லாம் பெண்களிடம் தனித்துவமான அழகு இருக்கும். புற அழகு மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க வகையில் திறமைகளும் நற்பண்புகளும் அதிகம் இருக்கும். ஆனால் இப்போது இளம் பெண்கள் எல்லோரும் நவீன ட்ரெண்ட்களின் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஃபேஷன், மேக்அப், ஹேர்ஸ்டைல் போன்றவற்றை நேர்த்தியாக செய்துகொண்டால், அழகாகிவிடாலாம் என்று கருதுகிறார்கள். இன்று அழகியாக வருவது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. ஒப்பனை சாதனங்களின் உதவியால் ஒப்பனை போட்டு, படங்கள் எடுத்து, போட்டோஷாப்பில் வேலை செய்தால் ஒரு ஆண் கூட அழகி போட்டியில் வெற்றி பெறமுடியும்’ என்றார். இவரது கருத்தை நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் சொன்னதை நிரூபிப்பதற்காக, ‘மிஸ் விர்ச்சுவல் கஜகஸ்தான்’ அழகிப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். ஒப்பனை மூலம் பெண்ணாக மாறினார். அழகான சிகை அலங்காரம் செய்துகொண்டார். தன்னை விதவிதமாக படங்கள் எடுத்து, ‘அரினா அலியேவா’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. யாருக்கும் ஆண் என்ற சந்தேகம் சிறிதும் வரவில்லை. உடனே அழகிப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தார்.

“நான் 17 வயதிலிருந்து மாடலாக இருக்கிறேன். அதனால் ஒரு பெண் போல் நேர்த்தியாக ஒப்பனை செய்துகொள்வது எனக்கு எளிதாக இருந்தது. உருவத்தை எளிதாக மாற்றிய அளவுக்கு பேச்சு, நடை போன்றவற்றை மாற்ற முடியவில்லை. பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டேன். முழு நம்பிக்கையோடு போட்டியில் கலந்துகொண்டேன். பல சுற்றுப் போட்டிகளில் எளிதாக வெற்றியடைந்தேன். இறுதிப் போட்டியில் நான் பங்கேற்று இருந்தால், ஒருவேளை ‘கஜகஸ்தான் அழகி’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒரு பெண்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும், அதுதான் நியாயம். என் நண்பர்களிடம் சொன்னதுபோல் நான் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்ததிலேயே என்னை நிரூபித்துவிட்டேன். அதனால் என்னைப் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டேன். அதில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை என்றும், இன்றைய அழகு வெறும் உடல் சார்ந்த விஷயமாக மாறிவிட்டதையும் எடுத்துக் காட்டவே இவ்வாறு பங்கேற்றேன் என்ற விளக்கமும் அளித்தேன். நான் ஆண் என்று தெரிந்தவுடன் என்னை தகுதி நீக்கம் செய்தனர். அந்த இடத்துக்கு இன்னொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். என்னுடைய நண்பர்களால் நான் இறுதிப் போட்டி வரை சென்றதை நம்பவே முடியவில்லை. பலரும் என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டு, எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான அழகும் தனித்துவமான திறமைகளும்தான் உண்மை யான அழகு என்பதை அழகிப் போட்டி நடத்துபவர்களும் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் இலி டியாஹிலேவ்.

நீங்க சொல்வதிலும் நியாயம் இருக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x