Published : 26 Aug 2014 05:23 PM
Last Updated : 26 Aug 2014 05:23 PM

மலேரியாவைவிட எபோலாவை தவிர்ப்பது எளிது: யு.எஸ்.ஏ.ஐ.டி

மலேரியாதான் இன்றும் உலகளவில் தவிர்க்கவியலா உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆனால் எபோலாவைத் தவிர்க்க முடியும் என்று சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

மலேரியா எளிதில் நம்மைத் தொற்றி விடும், ஆனால் எபோலா அவ்வளவு எளிதாக நம்மைத் தொற்றிவிடாது. ஆனால் கவனமின்மை, எபோலாவைப் பற்றிய மோசமான புரிதல் ஆகியவற்றின் காரணமாக எபோலா நம்மைத் தொற்றும்போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அந்த அமெரிக்க அமைப்பின் இயக்குனர் ஜெரிமி கொனைண்டிக் என்பவர் லைபீரியாவில் தெரிவித்துள்ளார்.

எபோலாவிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பதுதான் இன்று உலக மக்களுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நோயைப்பற்றிய புரிதல் மோசமாக உள்ளது.

இதனால் அது அதிவேகமாக பலருக்கும் பரவி பெரிய கொள்ளை நோயாக இன்று உருவெடுத்த்துள்ளது என்கிறார் அவர். எபோலாவுக்கு இதுவரை மேற்கு ஆப்பிரிக்காவில் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மலேரியா அனபீலிஸ் என்ற கொசு கடிப்பதன் மூலம் நம்மைத் தொற்றுகிறது. பொதுவாகத் தூங்கும் போது இந்தக் கொசு தன் கைவரிசையைக் காண்பிப்பதால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஒருவருக்கு எபோலா இருப்பது தெரியவந்தால், அவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றாமல் தடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய மேற்கு ஆப்பிரிக்க சாவுகளுக்குப் பிரதான காரணம் என்று கூறுகிறார் ஜெரிமி கொனைண்டிக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x