Published : 27 Mar 2024 06:59 AM
Last Updated : 27 Mar 2024 06:59 AM

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

ஜூலியன் அசாஞ்சே

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்சே (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் விசாரித்து நேற்று முக்கிய உத்தரவினைப் பிறப்பித்தார்.

“ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இவை குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் தொடர்ச்சியாக விசாரணை நடைபெறாது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அசாஞ்சேவுக்கு அனுமதி வழங்கப்படும்" என்று நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை மே 20-க்கு ஒத்தி வைக்கப் பட்டது.

இதுகுறித்து ஜூலியன் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா கூறும்போது, “எனது கணவருக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த வழக்கை அமெரிக்க அரசு கைவிட வேண்டும். இதற்கான உத்தரவை அதிபர் பைடன் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின் கூறும்போது, “அசாஞ்சே மீதான வழக்குகளை அமெரிக்க அரசு கைவிட வேண்டும்" என்று கோரினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x