பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 5 சீனர்கள் பலி

சீன தேசியக் கொடி
சீன தேசியக் கொடி
Updated on
1 min read

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்டவரையும் சேர்த்து உயிரிழப்பு மொத்தம் 6.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்று மாகாண காவல் துறை தலைவர் முகமது அலி காண்டாபூர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கைபர் பக்துன்கவா பகுதியில் சீனப் பொறியாளர்கள் பாகிஸ்தான் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தசு என்ற இடத்தில் அணை கட்டும் திட்டம் நடந்து வருகிறது. இதனைக் குறிவைத்து பலமுறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இன்று நடந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல் கடந்த 2021-ஆம் ஆண்டு தசுவில் நடந்த தாக்குதலில் 9 சீனர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் இதேபோல் சீனர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் மோதி தாக்குதல் நடத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது. முதலில் இந்தச் சம்பவம் பேருந்து விபத்து என சில ஊடகச் செய்திகளில் வெளியானது. ஆனால் பின்னர்தான் காவல் துறை இதனை தற்கொலைப் படை தாக்குதல் என உறுதி செய்தது.

பெல்ட் அண்ட் ரோடு திட்டம் என்றால் என்ன? - சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என சொல்லப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை என்ற விமர்சனமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in