

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜேசி சான் (32) தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாகவும், நண்பருடன் சேர்ந்து அதனை பயன்படுத்தியதாகவும் ஜேசி சான், அவரது நண்பரும், தைவான் நடிகருமான கே கோ ஆகியோரை சீன போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்காக ஜேசி சான் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக ஜேசி சான் தனது உதவியாளர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது தவறான செயலுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சீன அரசின் போதைப் பொருள் தடுப்பு கமிட்டியின் நல்லெண்ண தூதராக 2009-ம் ஆண்டில் நடிகர் ஜாக்கி சான் நியமிக்கப்பட்டார். தற்போது அவரது மகனே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது ஜாக்கி சானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
சீன சட்டப்படி போதைப் பொருளை வைத்திருப்பது, பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். போதைப் பொருள் தயாரிப்பது, கடத்துவது போன்ற குற்றங் களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும்.