ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானை முக்கியதளமாக கொண்டு தீவிரவாதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளை ஆக்கிரமித்த தீவிரவாதிகள், அங்கிருந்து கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத செயல்களை மேற்கொண்டனர். அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் சென்றது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, இனிமேல் அமெரிக்காவுக்கோ, அல்லது பிற நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கோ எதிராக ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் அரும்பாடு பட்டுள்ளனர். அந்நாட்டில் அரசுத் துறைகளை மீண்டும் கட்டமைப்பதில் அமெரிக்கர்கள் பலர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டுள்ளனர். 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் 9,800 அமெரிக்க வீரர்கள், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். 2016-ம் ஆண்டு இறுதிக்குள் அந்நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு, அமெரிக்க தூதரகம் மட்டுமே அங்கு செயல்படும்.

ஆப்கானிஸ்தானில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்நாட்டுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார் ஜோஷ் எர்னெஸ்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in