

வடமேற்கு பாகிஸ்தான், பழங்குடியினர் பகுதியில் அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
வடக்கு வஜிரிஸ்தான், கைபர் பழங்குடியினர் பகுதியில் சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “கைபர் பகுதியில் தீவிரவாதிகளின் 5 புகலிடங்களும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் 7 புகலிடங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன. 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் தகவல் தொடர்பு சாதனங்களும் அழிக்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
கராச்சி விமான நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் 6 பேர் பலி
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் இறந்தனர்.பஜாவுர் பழங்குடியினர் பகுதியில், கார் என்ற நகரத்துக்கு அருகே சலர்ஜாய் என்ற இடத்தில் பள்ளி வேன் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் வேனில் பயணம் செய்த 3 ஆசிரியைகள், 2 குழந்தைகள், சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் பெண் கல்விக்கு எதிராக தலிபான்கள் அப்பகுதியில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், இந்த குண்டுவெடிப்பை அவர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. பஜாவுர் பழங்குடியினர் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.