

பிரதமர் மோடி 4 நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதியாக நேற்று முன்தினம் இரவு ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தார். அந்நாட்டு துணை பிரதமர் சய்யித் பாத் பின் மஹ்மூத் அல் சைத் விமான நிலையத்துக்கே சென்று மோடியை வரவேற்றார். பின்னர் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்தை சந்தித்துப் பேசினார்.
மஸ்கட்டில் நடைபெற்ற ஓமன்-இந்தியா வர்த்தக கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அவர் பேசும்போது, “இந்தியாவில் 4 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் உள்ளது” என்றார். பின்னர் ஓமன் துணைப் பிரதமர் (சர்வதேச விவகாரங்கள்) எச்எச் சய்யித் ஆசாத் பின் தாரிக் சைத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் 125 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்கு (மோதீஸ்வர் மந்திர்) சென்று மோடி வழிபாடு நடத்தினார். குஜராத்திலிருந்து வர்த்தக ரீதியாக ஓமன் சென்றவர்கள் இந்தக் கோயிலைக் கட்டி உள்ளனர். இதையடுத்து, ஓமன் நாட்டு மற்றொரு துணைப் பிரதமர் சய்யித் பாத் பின் மஹ்மூத் அல் சைத்தை மோடி சந்தித்தார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ராணுவ ஒத்துழைப்பு, சுற்றுலா, சுகாதாரம், கல்வி உட்பட 8 துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.