காதுகளின்றி பிறந்த சிறுவனுக்கு 9-வது வயதில் கிடைத்த காதுகள்

காதுகளின்றி பிறந்த சிறுவனுக்கு 9-வது வயதில் கிடைத்த காதுகள்
Updated on
1 min read

பிரிட்டனில் இரு காதுகளும் இன்றி, கேட்கும் திறனற்று பிறந்த சிறுவனுக்கு 9-வது வயதில் காதுகள் பொருத்தப்பட்டன. இச்சாதனையை கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

கிரன் சோர்கின் என்ற சிறுவன் பிறக்கும்போதே கேட்கும் திறன் இன்றிப் பிறந்தான். அவனது இரு காதுகளும் வெளிப்புறத்தில் முழு வளர்ச்சியடையவில்லை. ஏறக்குறைய இருகாதுகளும் இல்லை என்றே சொல்லலாம். சிறிய அளவில் மடல்கள் மட்டும் இருந்தன. இக்குறைபாடு லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும்.

இந்நிலையில் அவனுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் காதுகள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுவனின் விலாப்பகுதியிலிருந்து குருத்தெலும்பு எடுத்து அதனைப் பயன்படுத்தி காதுகள் உருவாக்கப்பட்டன. பின்னர் 6 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவை இணைக்கப்பட்டன. நெய்ல் பல்ஸ்ட்ரோடு தலைமையிலான மருத்துவர் குழு இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது. இவ்வகையிலான அறுவைச் சிகிச்சை இதுவே முதல் முறையாகும்.

“எனக்கு பெரிய காதுகள் வேண்டும் என்பதுதான் விருப்பம். அது தற்போது நிறைவேறப் போகிறது” என அறுவைச் சிகிச்சைக்கு முன்பு கிரன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளான். காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டால், காற்றின் ஓசையையும், பறவைகளின் கீச்சொலியையும் கேட்க முடியும்” என்று கிரனின் தந்தை டேவிட் சோர்கின் தெரிவித்துள்ளார்.

கிரனால், இனி நன்றாகக் கேட்க முடியும். மற்றவர்களை விட வித்தியாசமாக இருந்ததால், பள்ளி நாட்களில் சிறுவன் கிரனுக்கு சிரமங்கள் ஏற்பட்டன. இனி அவனுக்கு தன்னம்பிக்கைக் குறைபாடு ஏற்படாது என அச்சிறுவனனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in