கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாட்டில் மசோதா நிறைவேற்றம்

Published on

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு ஆகியுள்ளது பிரான்ஸ்.

திங்கள்கிழமை அன்று பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் இதற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் அல்லது 512 உறுப்பினர்கள் ஆதரவு இதற்கு தேவையானதாக இருந்தது. இந்நிலையில், 780 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு பாரம்பரிய முறைப்படி ‘சீலிங் செரிமனி’ விழா அந்த நாட்டில் நடத்தப்படும். அந்த வகையில் இதற்கு வரும் மகளிர் தினத்தன்று (வெள்ளிக்கிழமை) சீலிங் செரிமனி நடைபெறும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் மகளிர் அனைவருக்கும் நாங்கள் ஒரு செய்தி சொல்கிறோம். உங்கள் உடல் உங்களுக்கு சொந்தம். அதில் யாரும் எந்த முடிவும் செய்ய முடியாது” என அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டத்தை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திரளான மக்கள் கொண்டாடினர். இதில் பெண்களும் இருந்தனர். உற்சாக மிகுதியில் பாடல் பாடியும் கவனம் ஈர்த்தனர்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1975 முதல் கருக்கலைப்பு குற்றமற்றதாக கருதப்படுகிறது. கருவுற்ற பெண்கள் 14-வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்பது சட்டப்பூர்வமானது. இந்த சட்ட திருத்தம் அதில் எதையும் மாற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in