

சர்வதேச அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தின்படி பாகிஸ்தான் அதிக அளவில் குழந்தைகள் இறப்புகளுடன் அபாயகரமானதாகவும், ஜப்பான் குறைந்த அளவில் குழந்தைகள் இறப்புகளுடன் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாகக் கொண்டு பாகிஸ்தான் அபாயகரமானதாகவும், ஜப்பான் குறைந்த அளவிலான குழந்தை இறப்பு விகிதத்துடன் பாதுகாப்பானதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், ஐஸ்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைத்து வாழ்வதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது. பாகிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க ரிபப்ளிக் நாடுகள், ஆப்கானிஸ்தானில் பிறந்த குழந்தைகள் உயிர்பிழைப்பது மிகவும் மோசமாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45 குழந்தைகள் இறந்துவிடுகின்றனவாம். இந்தியாவில் 1000 குழந்தைகளில் 25 குழந்தைகள். அதாவது ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பிறந்த 30 நாட்களுக்குள் உயிரிழந்து விடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
80% குழந்தைகள் இறப்பு, பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தொற்று நோய் பரவுதல் நிமோனியா தாக்கம் ஏற்படுதல் ஆகிய காரணங்களாலேயே நிகழ்கின்றன. இவற்றை சரியான மருத்துவ சேவை மூலம் தடுக்கலாம் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.