Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM

பாகிஸ்தான் விஞ்ஞானியை விடுதலை செய்யக் கோரிய தீவிரவாதிகள்

சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டுமெனில், அமெரிக்கச் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் விஞ்ஞானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பேரம் நடத்தியிருக்கிறார்கள். இது அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்துக்கு அனுப்பிய இமெயிலில் தெரியவந்துள்ளது.

பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே கொல்லப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆகஸ்ட் 12ம் தேதியிட்ட இமெயிலை வியாழக்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த 'தி குளோபல் போஸ்ட்' எனும் செய்தி வலைதளம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மற்ற நாட்டு அரசுகள் எல்லாம் எங்களிடம் சிக்கியுள்ள தங்களின் குடிமக்களை விடுவிக்க நாங்கள் கேட்ட பேரத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். அதேபோல உங்களுக்கும் வாய்ப்பளித்தோம். ஆனால் அதை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். எங்களின் சகோதரி மருத்துவர் ஆபியா சித்திக்கியைப் போன்று அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிப்பதற்கும் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கும் நீங்கள் முன்வரவில்லை.

இராக்கில் நீங்கள் ஆக்கிரமிப்பு செய்த‌போது பேசிய 'மோதல்' மொழியைத் தவிர இஸ்லாமியர்களுடன் வேறு எந்த விதத்திலும் தொடர்புகொள்வதை நீங்கள் விரும்பவில்லை.

எங்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவில்லாமல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறீர்கள். உங்கள் அரசு மற்றும் உங்கள் குடிமக்கள் என அனைவருக்கும் எதிராக எங்கள் வாள் வீசப்படத் தயாராக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் ஆபியா சித்திக்கி அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் நரம்பியல் நிபுணத்துவம் பெற்றவர்.

அமெரிக்கர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேதிப்பொருள் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு 2008ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 86 ஆண்டுச் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது அமெரிக்காவின் மிகப்பெரிய இஸ்லாமிய சிவில் உரிமை இயக்கமான 'அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கழகம்'. மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x