

இலவசமாக அடிடாஸ் ஷூக்கள் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்ற மெஸேஜ் உங்கள் வாட்ஸ் அப் இன்பாக்ஸில் வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள். அது தகவல் திருட்டுக்கான சைபர் க்ரிமினல்களின் முயற்சியாக இருக்கலாம்.
அடிடாஸ் தனது 93வது ஆண்டையொட்டி 3,000 ஜோடி ஷூக்களை இலவசமாகத் தருகிறது. அதை பெற Adidas.com/shoes என்ற லிங்கை தொடரவும் என்கிற செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஆனால் அது தகவல் திருட்டுக்கான முயற்சி என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் செய்தி தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தி போலியானது என அடிடாஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடிடாஸ் இலவச காலணிகளை தருவதாக உலவி வரும் வாட்ஸ் அப் மெஸேஜ் பற்றி நாங்கள் அறிவோம். அதை நம்பவேண்டாம் என பொதுமக்களைக் எச்சரிக்கிறோம். அது போலியான தகவல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஹாக்கர்களின் சொர்க்கமாக வாட்ஸப் திகழ்கிறது. நாளுக்கு நாள் தகவல் திருட்டுக்கான இது போன்ற போலி செய்திகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.