நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது. அதுமட்டுமல்லாது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனத்தின் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ட்யூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) இந்த வெற்றிகரமான வணிக முயற்சியை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் அபல்லோ கடந்த 1972ம் ஆண்டு மென்மையாக தரையிறங்கியப் பின்னர் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2023 ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தை அடைந்ததற்கு பின்னர் இந்த நிகழ்வு நடந்துள்ளது. 21-ம் நூற்றாண்டில் இந்திய லேண்டர் முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் வெற்றி குறித்து இன்ட்யூடிவ் மெஷின்ஸ் சிஇஓ ஸ்டீவ் அல்டெமஸ் கூறுகையில், “இது ஒரு திகிலூட்டும் அனுபவம் எனத் தெரியும். ஆனாலும் நாங்கள் நிலவில் இருக்கிறோம். நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்கிறோம். நிலவுக்கு நல்வரவு" என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசியஸ் நிலவின் தென்துருவத்துக்கு அருகில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற இடத்தில் தரையிறங்கியுள்ளது . அந்த இடம் ஒப்பீட்டளவில் தட்டையானது மற்றும் அதிகமான மலைகள், பாறைகளால் சூழப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் நேரத்துக்கு முன்பாக விண்கலம் அதன் சிக்னல் தொடர்பில் சில சிக்கல்களைச் சந்தித்தது. இதனால் பதற்றம் உருவானது என்றாலும் இன்ட்யூடிவ் மெஷின்ஸின் கட்டுப்பாட்டாளர்கள் விண்கலம் இன்னும் செயலிழந்து விடவில்லை என்றும் சன்னமான சமிக்ஞைகள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 1972-ம் ஆண்டில் அப்பல்லோ 12 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பிய ஒரே நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in