Published : 20 Aug 2014 12:17 PM
Last Updated : 20 Aug 2014 12:17 PM

எபோலா தொற்று அபாயத்தால் லைபீரியாவில் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கட்டுப்பாடு

லைபீரியாவில் எபோலா தொற்று நோய் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எபோலா நோய் தலைநகரில் பரவுவதை தடுக்க 50 ஆயிரம் பேர் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று எபோலா தொற்று ஏற்பட்ட 3 சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சோதனை மருந்து, பலன் தருவதாக கூறப்பட்டதை அடுத்து, அதன் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர முடிவெடுக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக லைபீரிய அதிகாரிகள் கூறினர்.

லைபீரியாவின் மேற்கு பகுதியை தாண்டி, மக்கள் யாரும் செல்லாதவாறு அங்கு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

அரசின் தனிமைப்படுத்தும் நடவடிக்கையால், லைபீரிய மக்கள் அரசின் மீது கோபம் கொண்டுள்ளனர். இன்று காலை தலைநகர் மோன்ரோவியாவில் உள்ள சுதாதார நிலைய அதிகாரிகள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

நோய் தொற்று காரணமாகவும், மக்களின் ஒத்துழைப்பு அளிக்காததன் காரணமாகவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மேலும், சுகாதார நிலையம் சென்றாலே, உயிரிழக்க நேரிடும் என்ற அச்சத்தால், பாதிக்கப்பட்ட பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட சிலரை, அவர்களது உறவினர்கள் வந்து திருப்பி அழைத்து செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனிடையே லைபீரிய மக்கள் அனைவரும் அமைதி காத்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிகிச்சை பெறுவதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க மக்கள் மறுப்பதால், அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

மக்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, எபோலாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களது உடல்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மரபு ரீதியிலான சடங்குகளை நடத்தி, உடல்களை அடக்கம் செய்யும் மக்களின் நடவடிக்கைகளால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும். சுகாதாரமாக உடல்களை அடக்கம் செய்வதால், நோய் தொற்றை தடுக்கலாம்.

ஆகையால், நாட்டு மக்கள் அனைவரும், அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம் என்று வலியுறுத்திக்கொள்கிறேன். நாம் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். நாடு காப்பாற்றப்பட வேண்டும்," என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x