Published : 21 Feb 2024 06:12 AM
Last Updated : 21 Feb 2024 06:12 AM

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

கோப்புப்படம்

துபாய்: துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியாவில் இருந்து 1 கோடியே 19 லட்சம்பேர் வந்ததால், வெளிநாட்டு பயணிகளின் வருகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. 67 லட்சம் பேருடன் சவுதி அரேபியா 2-வது இடத்திலும், 59 லட்சம் பேருடன் இங்கிலாந்து 3-வது இடத்திலும் உள்ளன.

வெளிநாட்டு பயணத்துக்கு துபாய் சர்வதேச விமான நிலையம்மிகவும் பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. இதனால் துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4-வது காலாண்டில் டிசம்பர் மாதத்தில் அதிகளவாக 78 லட்சம் பேர் சென்றுள்ளனர்.

அதேபோல் கடந்தாண்டில் விமான பயணிகளின் 7 கோடியே 75 லட்சம் பைகளையும் துபாய் விமான நிலையம் கையாண்டுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 99.8 சதவீதம். 1000 பயணிகளில் இருவர் மட்டுமே தங்கள் பைகளை மாற்றி எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறந்த மையம்: இங்கு பாஸ்போர்ட் சரிபார்க்க 7 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆவதாக 95 சதவீத பயணிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு சோதனை 4 நிமிடங்களுக்கு குறைவாக உள்ளது. விமான நிலைய சேவையில், துபாய் விமான நிலையம் உலகளவில் சிறந்த மையமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x