

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல் பெரு நாட்டின் தாம்போ பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் 10,000 பேர் வெளியேற்றம்
கலிபோர்னியா மாகாணத்தில் நாபா நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 50 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6 ஆக பதிவானது.
இதில் 120 பேர் பலத்த காய மடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கலிபோர்ணியா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது லேசான நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பல மாதங்கள் ஆகும் என்று அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது.
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து 467 கி.மீட்டர் தொலைவில் தாம்போ நகரம் உள்ளது. இந்த நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அதிக சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.