

சீனாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2,400 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் அதிக்காரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணம் லுடியானில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளை தொடர்ந்து நீக்கும் பணி மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 என்று சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2,400 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், இன்னும் பலரது நிலைபற்றித் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான குழுக்களும், நூற்றுக்கணக்கான தனியார் தொண்டு நிறுவன ஆர்வலர்களும் ஈடுப்பட்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் இடுபாடுகள் காரணமாக ஆறுகளிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தடைப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர் நிலச்சரிவுகள் ஏற்படுவதினாலும், மழையினாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் இடையூறுகளை பொருட்படுத்தாமல் மீட்பு நடவடிக்கை தொடர்கிறது. பல சாலைகள் மண்ணுக்குள் புதைந்ததால் பல நகரங்களின் தடமே மாறி உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ்கள், மக்களுக்கு உணவு கொண்டு செல்வது என அனைத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை நடந்து சென்றே மக்களுடம் கொண்டு சேர்க்கின்றனர்.