

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். அப்போது இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டு அரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சுவாமி நாராயண் கோயில் இன்று திறக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலை திறந்து வைத்தார்.
“இன்று (பிப்.14) ஐக்கிய அரபு அமீரகத்தில் பொன்னானதோர் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அபுதாபியில் பிரம்மாண்டமான மற்றும் புனிதமான கோயில் திறக்கப்பட்டுள்ளது. பல வருட கடின உழைப்பால் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டநாள் கனவு நிஜமாகியுள்ளது. பகவான் சுவாமிநாராயணின் ஆசி இக்கோயிலுக்கு உண்டு.
அயோத்தியில் பல நூற்றாண்டு கால நனவாகியுள்ளது. இந்தியா அதனை போற்றி வருகிறது. என்னை கோயில் அர்ச்சகர் என எனது நண்பர் பிரம்மவிஹாரி சுவாமி சொல்லி வருகிறார். எனக்கு அந்த தகுதி இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால், நான் பாரத மாதாவின் அர்ச்சகர் என்பது எனக்கு பெருமிதம். இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதை கண்டு மகிழ்கிறேன். அயோத்தி மற்றும் அபுதாபி கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த மரியாதை.
இந்த கோயிலை நிறுவ உதவிய தனது செயல் மூலம் அதிபர் முகமது அல் நஹ்யான் 140 கோடி இந்தியர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளார். அவர் இந்தியாவின் நண்பர். அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உன்னத உறவை வெளிக்காட்டும் தருணமாகவும் இது அமைந்துள்ளது. அவருக்கு நன்றி. இந்த கோயிலின் பேச்சு தொடங்கி நாள் முதல் இதோ இன்று திறப்பு விழா வரை நான் ஒரு அங்கமாக இருப்பது எனது பாக்கியம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கோயில் வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, சுவாமி தரிசனம் மேற்கொண்டு தியானத்தில் ஈடுபட்டார். நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மைக்கு இந்த கோயில் உதாரணமாக திகழும் என தனது அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.