Published : 10 Feb 2024 07:20 PM
Last Updated : 10 Feb 2024 07:20 PM

ரஃபா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி

இஸ்ரேல் - காசா போர்

டெல் அவிவ்: காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளின் அதிகார அத்துமீறலுக்கு இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.

அதாவது, காசாவின் மொத்த மக்கள் தொகையில், பெரும்பாலானவர்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தஞ்சமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவம் காசாவில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல், ரஃபா மீது படையெடுத்திருப்பது மனிதாபிமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். “நான்கு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் காசாவில் எஞ்சியிருக்கும் கடைசி ஹமாஸின் கோட்டையே இந்த எகிப்தின் எல்லையான ரஃபாதான்” என்று இஸ்ரேல் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x