பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: ஈரான், ஆப்கன் எல்லைகள் மூடல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: ஈரான், ஆப்கன் எல்லைகள் மூடல்
Updated on
1 min read

கராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (பிப்.07) சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கிலா சைபுல்லா நகரில் ஜேயுஐ - எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியேயும் குண்டு வெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தேர்தல் நாளுக்கு முன்தினம் நடந்த இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், இன்று காலை 8 மணி முதல் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி, அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தேர்தலை நடத்த பாகிஸ்தானில் உள்ள ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுத் தேர்தலின் போது முழு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான எல்லைப் பகுதிகள் சரக்கு வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மூடப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in