Published : 03 Feb 2024 01:06 PM
Last Updated : 03 Feb 2024 01:06 PM

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் புரட்சிப் படைகள் (ஐஆர்ஜிசி) மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 85-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டத்தற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிரியாவில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், உளவுத்துறை மையங்கள், ராக்கெட், ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிமருந்து சேமிப்புத்தளங்கள் என பல இடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடங்கப்பட்டதும், “நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு செய்தால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம். ஜோர்டான் தாக்குதலுக்கான பதிலடி நாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தொடரும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், “எங்களுடைய பதில் தாக்குதல் இன்று தொடங்கியுள்ளது. இது நாங்கள் தேர்தெடுக்கும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தொடரும். அமெரிக்கா மத்தியக் கிழக்கு மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் மோதலை விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள், நீங்கள் எந்த ஒரு அமெரிக்க மக்களுக்கு தீங்கு செய்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று தெரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் அதன் மிகப்பெரிய தாக்குதலின் முதல் கட்டத்தில், சிரியாவில் 4 இலக்குகள் மற்றும் ஈராகில் 3 இலக்குகள் என 7 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் சென்று தாக்கும் பி-1 பாம்பர்ஸ் உள்ளிட்டவைகள் கொண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 18 ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈராக் ராணுவம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடும் என்று எச்சரித்துள்ளது. ஈராக் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ரசூல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை மீறுவதாகும், ஈரான் அரசின் முயற்சிகளை குறைந்தது மதிப்பிடும் செயலாகும். மேலும் ஈராக் மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை குலைத்துவிடும் அபாயத்துக்கு ஈட்டுச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x