

புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பற்றி முன்னரே எச்சரிக்கை கிடைத்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிக்கோலஸ் குறித்து ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஒருவர், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யை தொடர்பு கொண்டு புளோரிடா பள்ளியில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்த உள்ளதாக எச்சரிக்கை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் கொடுத்த நபர் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "புளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில் நிகோலஸ் க்ரூஸ் என்ற நபர் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளார். அந்த நபர் சமூக வலைதளம் பதிவுகளால் மிகவும் குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் புளோரிடாவில் இருக்கும் எஃப்பிஐ அதிகாரிகளிடம் சென்றடையாத காரணத்தால் இது தொடர்பான விசாரணையில் இறங்க எஃப்பிஐ தவறிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.