

உண்பதற்கு முன்னால் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற உணவுக் காக கடவுளை நோக்கி நன்றி தெரிவித்தாலோ அல்லது வழிபாடு செய்தாலோ அவர்களின் உணவுக் கட்டணத்தில் 15 சதவீதம் தள்ளுபடி தருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் உணவகம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மேரீஸ் கோர்மெட் டின்னர் எனும் உணவகம் உள்ளது. இங்குதான் இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுமார் நான்காண்டுகளாக இவ்வாறு தள்ளுபடி வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் மேரி ஹக்லண்ட் கூறும்போது, "தள்ளுபடி வழங்குவது எங்களின் கொள்கை கிடையாது. தங்களுக்குக் கிடைத்த உணவுக்காக நன்றியை வெளிப்படுத்துபவர்களுக்கு எங்களின் சிறு அன்பளிப்பாக இதை நாங்கள் வழங்குகிறோம்" என்றார்.
மத அடிப்படையில் அல்ல
அருமையான உணவுகள் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில், அதற்காக மக்கள் தெரிவிக்கும் நன்றி என்பது மதம் சார்ந்தது கிடையாது, மாறாக ஆன்மிகம் சார்ந்தது என்கிறார் மேரி.