ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் தகர்க்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் தகர்க்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை
Updated on
1 min read

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதல் 23-ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் தகர்க்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் உடனான மோதல் நீடித்துவரும் வேளையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல், தனது தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் தகர்க்கப்படும். போர் நிறுத்தம் என்பது அமலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த தாக்குதல் நடத்தப்படுவது உறுதி என்றும் பகிரங்கமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, காஸாவில் 86,000 ராணுவ வீரகள் உள்ள நிலையில், மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த 16,000 ராணுவ வீரர்களை அனுப்ப இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காஸாவில் நடந்து வரும் தொடர் தாக்குதல் 23-ஆவது நாளாக நீடித்துவரும் நிலையில், இருத்தரப்பு தாக்குதல்களிலும் பலியாகி உள்ள பாலஸ்தீன மக்கள் உயிரிழப்பு 1,300 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தரப்பிலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுவரையில், ஹமாஸின் 32 சுரங்கப்பாதைகள் இஸ்ரேல் ராணுவத்தால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் இயக்கத்தினரை கண்கானிக்கும் நடவடிக்கைகளை, இஸ்ரேல் ராணுவம் வான்வழியே மேற்கொண்டு வருகிறது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு ஏவுகணை மூலம் குண்டு வீசி நடத்தும் தாக்குதல்கள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐ. நா பள்ளி வளாகம் மீதும், மசூதிகளின் மீதும் குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டன.

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 1360 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7,600 தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in