பிரேசிலில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து: 25 பேர் பலி
பிரேசிலியா: பிரேசிலில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா - கவியாவோ நகரங்களுக்கு இடையிலான ஃபெடரல் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தும் (மினி பஸ்), லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் மினி பஸ்ஸில் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் ஒன்றை ஒன்றை முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். விபத்துக்கான காரணம் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
