

இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்திப் பிரிவு செயலாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறியதாவது:
இந்தியாவுடனான ராணுவ உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. தோவல் ஆகியோரையும் சக் ஹேகல் சந்தித்துப் பேசுகிறார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ராணுவ கூட்டுப் பயிற்சி, பாதுகாப் புத்துறை வர்த்தகம், கூட்டுத் தயாரிப்பு- ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் சக் ஹேகல் ஆலோசனை நடத்துவார்.
இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதன்மூலம் இந்திய- அமெரிக்க ராணுவ உறவு மேலும் வலுவடையும் என்று உறுதியாக நம்புகிறோம். பிராந் திய, உலகளாவிய அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெ டுத்து வருகிறது. அந்த நாட்டுடன் பாதுகாப்பு, ராஜ்ஜிய ரீதியிலான உறவை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. சக் ஹேகலின் டெல்லி வருகை இருநாட்டு ராணுவ உறவில் முக்கிய திருப்பமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.