

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் டேவிட் பார்னெல் (56). இவரது மனைவி வெண்டி. இவர்கள் தாய்லாந்தில் உள்ள ஒரு வாடகைத் தாய் சேவை நிறுவனம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். இதற்காக அந்த நாட்டைச் சேர்ந்த பட்டாரானம் சான்புவா (21) என்ற பெண் வாடகைத் தாயாக செயல்பட்டார்.
இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். இதில் கம்மி என்ற ஆண் குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுவிட்டார். இரட்டை பெண் குழந்தைகளை மட்டும் தன்னுடன் அழைத்து வந்தார்.
இந்நிலையில், குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதாகக் கூறி வாடகைத் தாய் நிறுவனங்களை மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையை தன்னிடமே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக சான்புவா, டேவிட் தம்பதி மீது குற்றம் சாட்டினார். இந்த செய்தி சர்வதேச அளவில் ஊடகங்களில் வெளியானது.
அத்துடன், சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுடன் தகாத உறவு வைத்திருந்ததாக டேவிட் மீது 22 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, சேனல் 9 தொலைக் காட்சிக்கு டேவிட் முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது: எங்களுடைய ஆண் குழந்தைக்கு இதயக் கோளாறு இருப்பதாகவும், உயிர் பிழைப்பது அரிது என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். அதனால்தான் குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுவிட்டு வந்தோம். மரபணு குறைபாடு இருப்பதாகக் கூறியதால் தான் கம்மியை விட்டுவிட்டு வந்ததாகக் கூறுவது தவறு.
இப்போது ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனத்தின் உதவி மூலம் எங்களுடைய ஆண் குழந்தை குணமடைந்து விட்டான். அதனால் குழந்தையை எங்களிடம் வழங்குமாறு பட்டாரானமிடம் கேட்டபோது, அவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அத்துடன் எங்களிடம் உள்ள பெண் குழந்தை களையும் வேண்டும் என்று கேட்கிறார். எனவே, எங்கள் ஆண் குழந்தையை மீட்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என டேவிட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வாடகைத் தாய் நிறுவனத்துடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையில் தடையை நீக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.