Published : 17 Aug 2014 11:06 AM
Last Updated : 17 Aug 2014 11:06 AM

அல் காய்தாவுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை

இராக் மற்றும் சிரியாவில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐக்கிய நாடுகள் மன்றம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் நிதியுதவி அளிக்கும் ஆறு பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக எடுத்துள்ள தீர்மானத்தில், அல் காய்தா உள்ளிட்ட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைத்து அமைப்புகளையும் கலைத்துவிட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சிரியாவிலும், இராக்கிலும் அல் காய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல்வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதையும் தொடர்ந்து பிரிட்டன் நாட்டினால் இந்தத் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிரியா மற்றும் இராக்கில் அல் காய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பான அல் நுஸ்ராவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் நிதியுதவி செய்ததாக அப்துல் ரகுமான் முகமது சபீர் அல் தபிதி அல் ஜஹானி, ஹஜாஜ் பின் பஹத் அல் அஜ்மி, சையத் ஆரிப் மற்றும் அப்துல் மோசன் அப்துல்லா இப்ராகிம் அல் சரேக் ஆகிய நான்கு பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்களோடு 'இஸ்லாமிக் ஸ்டேட்' குழுவுக்கு நிதியுதவி செய்த ஹமீத் ஹமத் ஹமீத் அல் அலி மற்றும் அபு முகமது அல் அத்னானி ஆகியோருக்கு உலகில் வேறு எங்கும் பயணிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கிணறுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தங்கள் அமைப்புக்குத் தேவையான நிதியை ஏற்படுத்திக்கொள்கின்றன என்று இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டுக் குடிமக்கள் யாரும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்ய முன்வருவதைத் தடுக்கக் கோரியும், அவ்வாறு உதவி செய்பவர்களை நீதியின் முன்பு கொண்டுவரவும் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது ஐ.நா.வின் இந்தத் தீர்மானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x