Published : 24 Jan 2018 10:17 AM
Last Updated : 24 Jan 2018 10:17 AM

இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் இன்றி காஷ்மீர் பிரச்சினையில் சமரச முயற்சி இல்லை: ஐ.நா. பொதுச் செயலாளர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ளாமல் சமரச முயற்சியில் ஈடுபட வாய்ப்பில்லை என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறினார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் இந்தியாவில் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் மற்றும் இந்தியா தரும் பதிலடி காரணமாக பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம், “காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஏன் போதிய ஆர்வம் காட்டவில்லை” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஸ்டீபன் துஜாரிக் பதில் அளிக்கும்போது, “கடந்த 10 நாட்களாக என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்தவொரு பிரச்சினையிலும் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகம் எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் தங்கள் பிரச்சினையில் ஐ.நா.வின் தலையீட்டை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்வது அவசியம். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் மட்டுமே எந்தவொரு சமரச முயற்சியும் உண்மையாக இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையில் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்துவார்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x