காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 70+ பேர் பலி

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 70+ பேர் பலி
Updated on
1 min read

காசா: மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் (Maghazi refugee camp) மீது இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இன்று காலை வரை தொடர்ந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 70-க்கும் மேற்பட்டோரில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இந்தப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. வெஸ்ட் பேங்கில் உள்ள புனித நகரான பெத்லகேம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, காசாவில் உள்ள ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை இஸ்ரேலுக்கு பாதுகாப்புப் படையினர் கொண்டு சென்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 166 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், காசா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in