Published : 22 Dec 2023 09:09 AM
Last Updated : 22 Dec 2023 09:09 AM
பிரேக்: செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலையில் ஈடுபட்டது ஒரு மாணவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயர் டேவிட் கொசாக். 24 வயதான அவர் அதே பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்துவந்தார். துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்ட மாணவர் டேவிட் கொசாக் படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவருக்கு இதுவரை எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று பிரேக் காவல்துறை தலைவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு உள் துறை அமைச்சர் விட் ரகூசன் கூறுகையில், “மக்கள் போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் வளாகம் முழுவதும் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரதமர் பீட்டர் ஃபியாலா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரேக் நகருக்கு விரைவதாக அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT