காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்; ரஃபாவில் கட்டிடங்கள் தகர்ப்பு - 30+ பேர் பலி

காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்; ரஃபாவில் கட்டிடங்கள் தகர்ப்பு - 30+ பேர் பலி
Updated on
1 min read

காசா நகர்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 நாட்களைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாமில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் ரஃபாவில் மூன்று குடியிருப்புகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. இதில், 29 பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் அடெல் ஜரோப் என்ற பத்திரிகையாளரும் உயிரிழந்தார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19,453 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் அண்மையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இஸ்ரேல் போருக்கு அமெரிக்க கூட ஆதரவை தளர்த்தி வருகிறது. “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

அதற்கும் இரங்காத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “நாங்கள் கடைசி வரை போராடுவோம். இதற்குமேல் பேச எதுவுமில்லை. போர் நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்பதை வலியுடன் பதிவு செய்கிறேன். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம். அதைவிட எங்களுக்கு பெரிது எதுவும் கிடையாது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாமில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் ரஃபாவில் மூன்று குடியிருப்புகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டதில் 29 பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் அடெல் ஜரோப் என்ற பத்திரிகையாளரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in