Published : 03 Jan 2018 10:36 AM
Last Updated : 03 Jan 2018 10:36 AM

பாகிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்

பாகிஸ்தான் ராணுவத்துக்கான ரூ.1,621 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபடும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்ப தாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியபோது, “தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் பொய்களை மட்டுமே கூறிவருகிறது. அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக பாகிஸ் தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியபோது, “ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது. இதை மறைக்க பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுகிறது. தலிபான்களுடன் போரிடுவதை கைவிட்டு அந்த அமைப்புடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குங் சுகாங், பெய்ஜிங்கில் நேற்று கூறியபோது, “தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருகிறது. ஏராளமான தியாகங்களைச் செய்து வருகிறது. இதனை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ள வேண் டும்” என்றார்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் கூறியபோது, “ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்கு பாகிஸ் தான் ஆதரவு அளித்தது. அதற்கு பிரதிபலனாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எதுவுமே செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நேற்று அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் அமெரிக்காவின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், தீவிரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கூறியபோது, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1,621 கோடியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x