Published : 31 Jan 2018 09:55 AM
Last Updated : 31 Jan 2018 09:55 AM

தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கும் பாக். மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கன் வலியுறுத்தல்

தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் வழங்கும் பாகிஸ்தான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் தனது படை பலத்தை குறைத்துக்கொண்ட பிறகு தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் அங்கு நடந்த தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 15 நாடுகளின் தூதர்கள் நிலையிலான குழு ஆப்கானிஸ்தானுக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு திரும்பியுள்ளது.

இந்நிலையில் ஐநாவுக்கான ஆப்கன் தூதர் முகமது சைகல் வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச தீவிரவாதிகள் பலருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. இது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் தெரியும். அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதையும் மற்றொரு முக்கிய தீவிரவாதி முல்லா ஒமர் கராச்சி மருத்துவமனையில் இறந்ததையும் அவர்கள் அறிவார்கள்.

இதுபோல பலுசிஸ்தானில் பதுங்கியிருந்த முல்லா அக்தர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் தலிபான் அமைப்பின் முக்கியத் தீவிரவாதிகள் பலர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர். இதன் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி பாகிஸ்தான் செயல்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை கவுன்சிலிடம் ஆப்கன் அரசு வழங்கி உள்ளது. எனவே, கவுன்சில் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்பதை, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் மறுக்கவில்லை. இது உண்மை இல்லை என்றும் எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே, இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

அதாவது பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். அப்போதுதான் கவுன்சிலுக்கு அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x