

அமெரிக்காவில் இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொல்லப்பட்ட வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது, பேச்சு குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர். ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் ஷெரின் மரணத்துக்கு மூலக்காரணமாக இருந்த வெஸ்லி மேத்யூ மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டல்லாஸ் மாவட்ட வழக்கறிஞர் கூறும்போது, இதனை விவரமாக கூற முடியாது. ஆனால் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் வெஸ்லியின் மனைவி சினிக்கு எந்த தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.