பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்திய இடத்தை பார்வையிடும் பாதுகாப்பு படை அதிகாரிகள்.படம்: பிடிஐ
பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்திய இடத்தை பார்வையிடும் பாதுகாப்பு படை அதிகாரிகள்.படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான தெற்கு வஸிரிஸ்தானுக்கு அருகே உள்ள தேரா இஸ்மாயில் மாவட்டத்தில் தர்பான் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த காவல் நிலையத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிச்சென்று தகர்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கையெறி குண்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் அருகிலுள்ள டிஐ கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் காவல்நிலைய கட்டிடத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. நிலைமையை சமாளிக்க சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி சீல் வைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடல்: இந்த சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக மூடப்பட்டன.

பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

கைபர் பக்துன்குவா தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நிகழும் பகுதியாக உள்ளது. கடந்த ஜனவரியில் பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 101 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in