Published : 09 Jan 2018 09:32 AM
Last Updated : 09 Jan 2018 09:32 AM

இந்த ஆட்டம் யாருக்காக..?

“அ

மைதி வழிகளில் சற்றும் அக்கறையில்லாத, வலுவான, யோக்கியமற்ற எதிரி (நாடு), தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது; பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து நாம் விவாதித்துக் கொண்டு இருக்கும்போதே, வட கிழக்கில் மேலும் புதிதாக ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதுதான் அவர்கள் அமைதி ஏற்படுத்தும் விதம்.” (வானொலியில் ஜவகர்லால் நேரு – 22 அக்டோபர் 1962)

உலக அமைதிக்கு உழைத்த, உண்மையான ஜனநாயகவாதி - ஜவகர்லால் நேரு. அவரையே, ‘யோக்கியமற்ற எதிரி’ என்று கடும் சொற்களைப் பேச வைத்த பெருமை கொண்டது – சீனா! அந்நிய எல்லைகளின் மீது அத்துமீறல், அண்டை நாட்டுப் பகுதியை ஆக்கிரமித்தல்.. என்று கடந்த 60 ஆண்டுகளாகவே, சீனாவின் வெளியுறவுக் கொள்கை, பிராந்திய அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே உள்ளது.

‘பசிபிக் பெருங்கடல் பகுதி வரை விரிவடைவதே எங்களின் நீண்ட கால இலக்கு’ என்று பட்டவர்த்தனமாகப் பிரகனம் செய்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். 1950-களில் தொடங்கியது சீனாவின் ஆயுதப் பெருக்க நடவடிக்கை. தனது கையில் அணு ஆயுதம் இருந்தால், பேரம் பேசும் வலிமை கூடும் என்று முடிவு செய்தார் மா சே துங். 1958-ல், யுரேனியம் செறிவூட்டும் இரண்டு ஆலைகளை நிறுவினார். அணு ஆயுதத் தயாரிப்பில் உதவ, சோவியத் யூனியன் முன் வந்தது.

சீனாவின் அணு ஆயுத முனைப்புக்கு அமெரிக்காவின் ஜான் ஃப் கென்னடி, பல வகையிலும் முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தார். 1960-ல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு சோவியத் யூனியன் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் நிகிதா குருஷேவ். இருப்பினும் சீனாவின் முயற்சி தொடர்ந்தது. 1964-ல், முதன் முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

அடுத்த சுமார் 30 ஆண்டுகளில், 40-க்கும் மேற்பட்ட முறை, சோதனை நடத்தியது சீனா. தற்போது சீனா வசம், 200 முதல் 400 வரை அணுகுண்டுகள் இருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற இணையங்கள் தெரிவிக்கின்றன.

1967லேயே ஹைட்ரஜன் குண்டு வெடித்துப் பார்த்தது சீனா. தொடர்ந்து, ‘உயிரி ஆயுதங்கள்’, ‘ரசாயன ஆயுதங்கள்’ என்று எதையும் விட்டு வைக்காமல், வகை வகையாய்த் தயாரித்துக் குவித்தது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சீன ஏவுகணைகள் 14,000 கி.மீ. வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. சீனா – அமெரிக்கா இடையே உள்ள தூரம் – 11,640 கி.மீ. கடந்த ஆண்டு மட்டும், சீனாவின் பாதுகாப்பு செலவு, 146 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இது, கூடிக் கொண்டே போகிறது.

இதேபோல், அதிகமாகிக் கொண்டே போகிற இன்னொன்றும் உண்டு. உலகம் முழுதும், பசி, பட்டினி, சண்டை, கலவரம் காரணமாக உயிர் இழப்போரின் எண்ணிக்கை. இது குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு, சீனாவின் பார்வை கடல் பரப்பின் மீதுதான் குத்திட்டு இருக்கிறது.

தென் சீனக் கடல்!

- தொடரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x