

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
கிழக்கு உக்ரைனில் செயல்படும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது. ஆனால் ரஷ்யாவின் உதவியின்றி அவர்களால் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது. இந்த விவகாரம் அனைத்துக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்தான் பொறுப்பு. இந்த ஒரு சம்பவத்துக்கு மட்டுமல்ல. உக்ரைன் விவகாரத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்தான் பொறுப்பு என்றார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எரிக் கூறியதாவது:
உலகளாவிய அளவில் புதின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ரஷ்ய மக்களே அவரை நோக்கி கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் விமானம் விழுந்துள்ளது. விமானத்தை குறிதவறாமல் சுடுவதற்கு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய ராணுவம் பயிற்சி அளித்திருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்ழ்பட்டபோது கிரிமியா பகுதியில் ரஷ்ய ராணுவம் இல்லை என்று அந்த நாடு வாதிட்டது. ஆனால் கிரிமியா முழுவதும் ரஷ்ய ராணுவம் பரவி இருந்தது பின்னர் தெரியவந்தது. ரஷ்யாவிடம் ஆரம்பம் முதலே உண்மை இல்லை என்றார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன் கூறியபோது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது. கடந்த வாரம்கூட 100 டாங்கிகள், ஏராளமான ராக்கெட்டுகளை அளித்துள்ளது என்றார்.