Published : 07 Jan 2018 10:09 AM
Last Updated : 07 Jan 2018 10:09 AM

இந்த ஆட்டம் யாருக்காக…?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி முதல் தேதி, ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார். ‘வாழ்த்துச் செய்திதானே?’ என்கிறீர்களா? அதுதான் இல்லை. அதற்கு நேர் மாறானது. இந்தியாவில் இதற்கு, தாறுமாறாக வரவேற்பு.

“கடந்த 15 ஆண்டுகளில், முட்டாள்தனமாக, 33 பில்லியன் டாலருக்கு மேல் பாகிஸ்தானுக்கு உதவி தந்து இருக்கிறோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் நாம் தேடும் தீவிரவாதிகளுக்கு அவர்கள் புகலிடம் தந்துள்ளனர்”. இதனைத் தொடர்ந்து, ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 1.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விட்டது அமெரிக்கா.

நம்மவர்களுக்கு, சொல்லொணாப் புளகாங்கிதம். இருக்காதே பின்னே…? இது நமக்குக் கிடைத்த ‘வெற்றி’ ஆயிற்றே…! ஏறக்குறைய இதே நேரத்தில், அமெரிக்காவில் இருந்து வந்த இன்னொரு செய்தி – எச்1பி விசாவுக்குக் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிப்பு. பல்லாயிரக்கணக் கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதை எப்படி ‘சரி கட்டலாம்..?’ பார்த்தார் ட்ரம்ப். இருக்கவே இருக்கிறது - ‘தீவிரவாத எதிர்ப்பு’. அதுவும், பாகிஸ்தானை நேரடியாகக் குறை சொன்னால்…? போதுமே….! இந்தியர்களின் வேலை வாய்ப்பையும் பறிக்கலாம்; பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வதையும் நிறுத்தலாம். எது நம் கண்ணை மறைக்கிறது…?

‘தேச பக்தி’! அணு ஆயுதப் பரவலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பது இந்த அதி வலிமையான ஆயுதம்தான். ‘தேசப் பாதுகாப்பு’, ‘நாட்டு நலன்’ என்று சொல்லிவிட்டால், பிறகு எந்தப் பயல் வாய் திறப்பான்…?

வடகொரிய நாட்டின் முன்னாள் மூத்த பொருளாதார அதிகாரி ‘ரி ஜாங் ஹோ’ கூறுகிறார். ‘ வடகொரியாவில் உண்பதற்கு ஒன்றுமே இல்லை; இந்த நிலை நீடித்தால், பலர் மாண்டு போவார்கள்; உணவுக்காக வட கொரியா, சீனாவிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறது.”

இதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் சகட்டு மேனிக்கு ‘உதார்’ விட்டுக் கொண்டு திரிகிறார் கிம் ஜாங் உன். எப்படி முடிகிறது…? ‘தன்மானம், பெருமிதம், கடந்த கால வரலாறு…..’ நாட்டுப்பற்று என்கிற பெயரில் அரங்கேறுகிற மோசடி வார்த்தைகள்.

யாரும் தவறாகப் பொருள் கொண்டுவிட வேண்டாம்;

எதற்கு முன்னுரிமை தருகிறோம்..? யார் பாதிக்கப்படுகிறார்கள்..? இதனை வல்லரசுகள் துளியும் வெட்கமில்லாமல் எப்படி, தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றன….? என் பதற்காக மட்டுமே இந்த வாதம்.

‘ஜெருசலேம்’, இஸ்ரேலின் தலைநகரம் என்று 2017 டிசம்பரில் ட்ரம்ப் அறிவித்தார். மத்திய கிழக்கில் எதிர்ப்புக் குரல்கள் பலமாகக் கேட்கின்றன.

பாலஸ்தீனம் ஒது(டு)க்கப்பட வேண்டும்; சவுதி அரேபியாவுடன் நட்பு தொடர வேண்டும். இரண்டையும் சமன் செய்கிற வேலையை அமெரிக்கா, கன கச்சிதமாகச் செய்தது. எப்படி…?

‘ஆப்கானிஸ்தானில் சோவியத் எதிர்ப்பு’, ‘குவைத்தில் இராக் எதிர்ப்பு’ என்கிற அடிப்படையில், 1990-களில், அமெரிக்காவுடன் கை கோத்தது சவுதி அரேபியா. 2010 செப்டம்பரில், அமெரிக்கா – சவுதி அரேபியா இடையே, 60 பில்லியன் டாலருக்கு ஆயுத உடன்படிக்கை ஏற்பட்டது. காந்தியம் தன்னைப் பெரிதும் ஈர்த்ததாகச் சொன்ன ஒபாமாவின் ஆட்சியில்தான் இது நடந்தது.

இப்போது டொனால்டு ட்ரம்ப் இருக்கிறார். சொல்ல வேண்டுமா…? அக்டோபர் 2017. சவுதியுடன் உடனடியாக 110 பில்லியன் டாலர்; அடுத்த 10 ஆண்டுகளில் 350 பில்லியன் டாலருக்கு ஆயுத உடன்படிக்கை எட்டப்பட்டது.

இதை யார் முன் எடுத்து நிறைவேற்றியது…? சவுதி இளவரசருக்கு நெருங்கிய நண்பரும் டொனால்டு ட்ரம்ப்பின் மருமகனுமான ‘ஜரேட் குஷ்னர்’.

‘ஜெருசலேம்’ அறிவிப்பும், 350 பில்லியன் டாலர் ஆயுத உடன் படிக்கையும் சமன் ஆகிறதா…? இதுதான் வல்லரசுகள் ஆடுகிற விளையாட்டின் சூட்சுமம். இந்தக் கயிறு இழுப்பு விளையாட்டின் ஒரு முனையில் அமெரிக்கா. மறு முனையில்..

தொடரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x