

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை நிறுத்த எகிப்து அரசு மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. சமரச திட்டத்தை இஸ்ரேல் அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், ஹமாஸ் இயக்கம் நிராகரித்துவிட்டது.
காஸா பகுதியில் இஸ்ரேல் அரசு வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. காஸா எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்திவைத்துள்ளது. இதுவரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ் தீனர்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்திய அரசு இருதரப்புக்கும் இடையே சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த திங்கள்கிழமை எகிப்து அரசு முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின்படி, ஹமாஸும் இஸ்ரேலும் பரஸ்பரம் தாக்குதலை செவ்வாய்க்கிழமை காலை முதல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, காஸாவுடனான எல்லையை திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை இஸ்ரேல் அரசு ஏற்றுக்கொண்டது. அதே சமயம், ஹமாஸ் இயக்கம் இந்த சமரச திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரபு நாடுகள் ஆதரித்துள்ள எகிப்தின் சமரச திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கு மறுப்பு தெரிவித்தால், எங்களின் தாக்குதலை தீவிரப்படுத்துவோம்” என்றார். இது தொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி கூறும்போது, “எகிப்து முன்வைத்துள்ள சமரச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்பு 2012-ல் முன்வைக்கப்பட்ட சமரச ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதித்து நடக்கவில்லை. அப்போதும் எல்லையை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமரச திட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், அதை இஸ்ரேலும் எகிப்தும் செயல்படுத்தவில்லை.தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள எங்களை போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்பது சரியா?” என்றார்.
காஸா பகுதியுடனான எல்லையை இஸ்ரேலும் எகிப்தும் மூடியுள்ளதால், அப்பகுதிக்குள் சரக்குகள் எதுவும் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்