Published : 12 Jan 2018 10:12 AM
Last Updated : 12 Jan 2018 10:12 AM

இந்த ஆட்டம் யாருக்காக…?

அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் தகுதி, 2 நாடுகளுக்கு இருக்கிறது. ஒன்று - இந்தியா. மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்... என்று அடுக்கடுக்காய் பல தலைவர்கள் அமைதிக்கு ஆதரவாக, ஆயுதப் பரவலாக்கலை எதிர்த்துப் பேசிய, பணியாற்றிய வரலாறு இந்தியாவுக்கு உண்டு.

மற்றொரு நாடு – ஜப்பான். 1945-ல் அணுகுண்டு தாக்குதலை எதிர்கொண்ட நாடு. 72 ஆண்டுகளுக்குப் பிறகும், அணுக் கதிர்வீச்சின் பாதிப்புகளில் இருந்து வெளிவர முடியாமல் இன்னமும் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

அரசுப் பணி நியமனத்தில், ‘கருணை அடிப்படையில் சேர்ப்பது’ என்ற வழக்கம் உண்டு. பணியின் போது அரசுப் பணியாளர் தவறி விட்டால், அவரது வாரிசுக்கு, கருணை அடிப்படையில், பணி தருவது.

சர்வதேச சமூகம் உண்மையிலேயே நாகரிகமான ஒன்றாக இருந்து இருக்குமானால், ஆயுதப் பெருக்கம், குறிப்பாக, அணு ஆயுதக் குவிப்புக்கு எதிராக, வலுவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்க வேண்டும். அதன் தலைமைப் பொறுப்பை, ஜப்பானுக்கு தந்திருக்க வேண்டும்.

உலக அமைதி, மனித உரிமைகள் என்று வாய் கிழியப் பேசும் எல்லாருக்கும், ஹிரோஷிமா தாக்குதலின்போது, அழுதபடி ஓடி வருகிற சிறுமியின் புகைப்படம் மட்டும்தான் வேண்டும். மற்றபடி இவர்களில் பெரும்பாலானோர், ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கிறவர்கள்.

உலக மக்களிடையே, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முழு ஆதரவு கிட்டாமல் போவதற்கான காரணமே, எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகிற ஆயுதப் போராட்டம்தான்.

இஸ்லாத்தின் பேரில் பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ள எந்தக் குழுவுக்கும் இஸ்லாமிய நாட்டு மக்களேகூட, ஆதரவு தருவதில்லையே. காரணம், மக்கள் நாடுவது அமைதியை. வன்முறையை வன்முறையால் வெல்ல முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் நிழல் யுத்தம் நடத்து கிறார்கள்.

1945-க்கு முன்பும் அதற்குப் பின்னரும்கூட, ஆக்கிரமிப்பு போர் நடத்துவதில் ஜப்பான் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனாலும், ஜப்பானை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறது சீனா. இரு நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை?

‘கிழக்கு சீனக் கடல்’தான். ஜப்பானுக்குத் தென்மேற்கே, தைவானுக்கு வட கிழக்கே, கிழக்கு சீனக் கடலில் உள்ளது – ‘சென்காக்கு’ என்றழைக்கப்படும், எட்டு மிகச் சிறிய தீவுகள் கொண்ட பகுதி. 18-ம் நூற்றாண்டு இறுதியில், இந்தத் தீவுகளில் ஆய்வுகளை மேற்கொண்டது ஜப்பான். மனித வசிப்போ, ஆள் நடமாட்டமோ இல்லாத பகுதி இது என்பதை உறுதி செய்து கொண்டது. தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான், தனது எல்லைகளில் பலவற்றை விட்டுக் கொடுத்து, ‘சான் பிரான்சிஸ்கோ’ உடன்படிக்கையை எட்டியது. 1951-ல் இந்த உடன்படிக்கை ஏற்பட்டாலும், ஜப்பான் ‘கண்டுபிடித்த’ தீவுக் கூட்டம் அடுத்த 20 ஆண்டுகள் வரை, அமெரிக்க மேற்பார்வை யின் கீழ்தான் இருந்தது. 1971-ல், இதை மீண்டும் ஜப்பானுக்கே தந்துவிட்டது அமெரிக்கா.

எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்து விட்டது. 1970-களில் கிழக்கு சீனக் கடலில், ஜப்பானுக்கு சொந்தமான ‘சென்காக்கு’ தீவுக் கூட்டத்தை ஒட்டியும், அதைச் சுற்றியும், அளப்பரிய எண்ணெய் வளம் நிறைந்து இருப்பது தெரிந்தது. இதனால்தான் வந்தது ஆபத்து.

(தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x