

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று, நெதர்லாந்து பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விமானத்தில் நெதர்லாந்து பயணிகள் 173 பேர் பயணம் செய்துள்ளனர். அந்நாட்டினர் அதிகம் பேர் உயிரிழந்த 2-வது மிகப்பெரிய சம்பவம் இது. உறவினர்கள் பலரை பறிகொடுத்த ஹேக் நகரைச் சேர்ந்த சாண்டர் எஸ்ஸர்ஸ் கூறும்போது, “என்ன நடந்தது என்பதை முழுமையான அறிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே இந்த சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தவேண்டும்” என்றார்.
சாண்டர் எஸ்ஸர்ஸ் தனது சகோதரர் பீட்டர் (66), அவரது மனைவி ஜோலட் (60), குழந்தைகள் எம்மா (20), வேலன்டிஜின் (17) ஆகிய நால்வரை இழந்துள்ளார். பீட்டர் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்தோனேசியாவில் 3 வார விடுமுறையை கழிப்பதற்காகச் சென்றார். “விமானம் புறப்படுவதற்கு முன் 20 நிமிடங்கள் நான் பீட்டருடன் பேசினேன். தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் பீட்டர் எதிர்கால திட்டங்கள் வைத்திருந்தார்” என்றார் சாண்டர் எஸ்ஸர்ஸ்.