

இலங்கையில் விடுதலைப் புலிகளால் கொன்று புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கும் பணி வரும்18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான் குடியில் ஏராளமான முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொன்று புதைத்ததாக புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், 100 முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் புதை குழிகளை அகழாய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி புதைகுழியை தோண்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுபோன்ற புதைகுழிகளை மருத்துவ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் முன்னிலையில்தான் தோண்ட வேண்டும் என்றும், அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவை என்றும் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோஹனா தெரிவித்தார்.