Published : 25 Jan 2018 01:05 PM
Last Updated : 25 Jan 2018 01:05 PM

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரு இந்தியர்கள்

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் நியூயார்க் தொகுதி  தேர்தலில் போட்டியிட,  ஜனநாயக கட்சியின் சார்பில்  இரு இந்தியர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அமெரிக்க அரசியலில் சமீபகாலமாக இந்தியர்கள் அதிக அளவு பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக, ஜனநாயக கட்சியில் அதிக அளவு சேர்ந்து வருகின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு 2016ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில், செனட் சபை எம்.பியாக கமலா ஹாரிஸ், அமி பேரா, ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், ஆகியோர் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் அவை எம்.பிக்களாக உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் காலியாகவுள்ள இடங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரசித்தி பெற்ற நியூயார்க் 11வது தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் முதல் கட்டத் தேர்தல் நடத்தி வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். அதன் பின் தேர்தலில், அந்தந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அவர்கள் போட்டியிடுவர். அவர்களில் ஒருவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்படி ஜனநாயக கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் நியூயார்க் 11வது தொகுதியில் இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் ஓமர் வைத். இவரது பெற்றோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் இலினாய்ஸ் பகுதிக்கு அவர்கள் குடி பெயர்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஓமர் வைத் கூறுகையில் ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாட்டை தவறான முறையில் வழி நடத்துகிறார். அவரது மோசமான கொள்கைகளுக்கு எதிராக போராடுவேன். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ எனக் கூறினார்.

இதேபோல் ஜனநாயக கட்சியின் சார்பில் மோகன் ராதாகிருஷ்ணன் என்ற இந்தியரும் போட்டியிடுகிறார். நியூயார்க்கை சேர்ந்த மோகன் ராதாகிருஷ்ணன் இந்து கோயில் வாரிய நிர்வாகியாகவும் உள்ளார்.

இந்தியர்கள் இருவர் உட்பட ஜனநாயக கட்சியில் மொத்தம் ஆறு பேர் மோதுகின்றனர்.  இவர்களில் யார் வேட்பாளர்களாக தேர்வானாலும், ஆளும் குடியரசு கட்சியின் பலமான வேட்பாளரான டான் டானாவனை எதிர்த்து போட்டியிட வேண்டும். இந்த தொகுதியில் நீண்ட காலமாகவே குடியரசு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x