

மும்பையில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்- தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது சதித்திட்டம் தீட்டிக் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் ஜமாத்-உத்- தாவா அமைப்பு கொண்டு வரப்பட்டது. மேலும், அதே ஆண்டு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்திலும் ஹபீஸ் சயீதின் பெயர் இடம்பெற்றது. எனினும், அவர் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதன்பேரில், ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு வீட்டுச் சிறையில் அடைத்தது. எனினும், சில மாதங்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக அறிவுறுத்தியது.
ஐ.நா. குழு வருகை: இந்நிலையில், ஹபீஸ் சயீது மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இக்குழுவினர் அங்கு தங்கியிருந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து ஐ.நா. சபையில் அறிக்கை சமர்ப்பிப்பர்.