12 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

12 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்
Updated on
1 min read

கடந்த 3 வாரங்களாக நீடித்து வரும் தாக்குதல்களை 12 மணி நேரத்திற்கு நிறுத்திவைக்க, இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, கடந்த 18-ம் தேதியன்றும், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க மனிதாபிமான அடிப்படையில் காஸா பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களை 5 மணி நேரம் நிறுத்தி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

தற்போது, இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆன மோதல் நீடித்து வருகிறது. போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, "உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கிறோம். ஆனால் இதனை மீறி ஹமாஸ் தரப்பினர் தாக்குதல் நடத்தினார், அதற்கு பதிலடித் தர நாங்கள் தயார் நிலையில் இருப்போம்" என்று கூறியது

அதே போல, ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு சூரி, ஐ.நா.வின் கோரிக்கையை ஏற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று இரவு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முன்வைத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஜான் கெர்ரி மற்றும் பான் கி மூன் அளித்த கோரிக்கையை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நிராகரித்து, காஸாவில் தனது தாக்குதல்கள் தொடரும் என்று அறிவித்திருந்தது.

நேற்று காஸாவில், ஜிகாத் அமைப்பின் முக்கிய தலைவரின் வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜிகாதி தலைவர் ஒருவரும் அவரது இரு மகன்களை கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜிகாதிகளின் கைவசம் உள்ள 45 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

நேற்றைய தாக்குதலில் நுற்றுக்கணக்கானோர் பலியானதை கண்டித்து, மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீனர்கள், 'சீற்றமிகு தினம்' என்று கூறியும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

காஸாவில் கடந்த ஜூலை 8- ஆம் தேதி முதல் நடந்துவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 875-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இன்று காலை, போர் நிறுத்தத்திற்கு முன்னர், காஸா எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலிலில் 8 பேர் கொல்லப்பட்டனம் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in